
நேர்காணல்:
ஸ்ரீமதி ரவிச்சந்திரன்
பாதுகாப்பானதும் சிக்கனமானதும் ஹோமியோபதியே!
ஜாய்ஸ் திலகம்
பொதுவாக முன்பெல்லாம் நம் எல்லோருக்கும் காய்ச்சல் அல்லது வேறு ஏதாவது வியாதி வந்தால் உடனே ஆங்கில (அலோபதி) மருத்துவரிடம்தான் செல்வோம். ஆனால் சமீப காலமாக பல பேர் ஹோமியோபதி மருத்துவரையும் நாடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணம் பக்க விளைவுகள் ஏதுமின்றி அதேசமயம் அதிகப் பணம் செலவழிக்கும் அவசியம் இல்லாமலும் உள்ளது.
டாக்டர் திருமதி ஜாய்ஸ் திலகம் சென்னை மாநகராட்சியில் முதல் ஹோமியோபதி மருத்துவராக 1980-ம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டவர். இவரது தந்தையும், சகோதரரும் ஹோமியோபதி மருத்துவர்களே! ஹோமியோபதி மருத்துவத்தை படிக்கும்போது கல்லூரியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார். கோவாவில் நடைபெற்ற ஹோமியோபதி விஞ்ஞான கருத்தரங்கில் பங்கு பெற்று தேசிய அளவில் இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளார். இதழ்கள், வானொலி முதலானவற்றில் ஹோமியோபதி மருத்துவம் பற்றி பல கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார். சென்ற ஆண்டு இவர் எழுதிய 'பணி சார்ந்த பிணிகள்' என்னும் நூல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. அவருடன் ஒரு நேர்காணல்.
அலோபதி அளவுக்கு ஹோமியோபதி அவ்வளவாக பிரபலமடையவில்லையே. காரணம் என்ன?
"மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி மருத்துவம்தான் தூய்மையானதும், சிக்கனமானதும் மற்றும் அஹிம்சா வழியை தழுவியதுமாகும். மறைந்த மருத்துவ மாமேதை டாக்டர் ஹானிமன் மனித உயிர்களைக் காப்பாற்ற சிறந்த வழியை வகுத்த ஒரு மருத்துவ நிபுணராவார். அவரது திறமைக்கும் ஆற்றிய அசாத்திய மருத்துவப் பணிக்கும் அவரது மனித இன நலப்பற்றுக்கும் நான் தலைவணங்குகிறேன்"-(ஒரு புத்தகத்திலிருந்து படிக்கிறார்). இந்த வரிகள் யார் சொன்னவை தெரியுமா? நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி! மேலும் ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த ஹானிமன் ஆங்கில மருத்துவ எம்.டி. பட்டப்படிப்பில் ஜெர்மனியில் உள்ள எர்லேஞ்சன் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, பின்னர் தொழில் புரிந்து கொண்டிருந்தவர். அவருக்கு 21 மொழிகள் தெரியும். அவர் ஆங்கில மருத்துவம் தெரியாததால் இந்த ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றவில்லை. ஆங்கில மருத்துவத்தில் சில நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனின்றி போகவே அல்லது பக்கவிளைவுகள் அதிகரித்து அதன் காரணமாக சில விரும்பத்தகாத முடிவுகள் ஏற்படவே ஹோமியோபதியை கண்டுபிடித்தார். எளிமையாகச் சொன்னால் தமிழில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனடிப்படையில் அமைந்ததுதான் ஹோமியோபதி. சின்கோனா மரத்து இலைகளைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டபோது மலேரியாக் காய்ச்சல் வந்தது. பின்னர் அதே சின்கோனா மரத்து இலைகளைத் தகுந்த அளவில் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் குணமாயிற்று. இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. அதன்பின்னர் படிப்படியாக பல்வேறு சோதனைகள் செய்து இம் மருத்துவத்தை வளர்த்தார்.
ஆங்கில மருத்துவத்தில் நோயாளிகளை வயதின் அடிப்படையில் மட்டுமே பிரித்து அவர்களுக்கு மருந்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் ஹோமியோபதியில் நோயாளிகளின் வயது ஒன்றாக இருந்தாலும் கூட வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன என்பதாகச் சொல்லப்படுகிறதே?
ஆமாம். இதன் காரணம் என்னவெனில் ஒரு மனிதனின் மனோநிலையைப் பொறுத்தும், உடல்ரீதியாக அவனது தாங்கும் சக்தி எவ்வளவு என்பதைப் பொறுத்துமே மருந்துகளும், அளவும் ஹோமியோபதியில் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒரு மனிதனின் மனநிலை அவன் பார்க்கும் வேலையைப் பொறுத்தே அமைகிறது. உதாரணத்துக்கு சினிமாவில் பணிபுரிபவர்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வார்கள். விழித்திருப்பதற்காக காபி டீ ஆகியவற்றை அடிக்கடிக் குடிப்பார்கள். இது இவர்களுக்கு வாயு, ஏப்பம் முதலிய வாயுத் தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. மேலும் தங்களுடைய மனதில் இருக்கும் உண்மை நிலையை அவ்வளவாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அதுவே அவர்களுக்கு இயல்பாகி விடுகிறது. நடிக நடிகையர்கள் தங்களுக்கென்று எந்தவித மகிழ்ச்சி, சோகங்கள் இருந்தாலும் அதனை மறைத்து நொடிப்பொழுதில் சிரித்து, அழுது, இப்படிப் பல்வேறு உணர்ச்சிகளைப் பொய்யாகக் காட்ட வேண்டியிருக்கிறது. இதனால் மன உளைச்சல், உடல் உளைச்சல் (Stress) அதிக அளவு இரத்தக் கொதிப்பு முதலியன உண்டாகிறது. அடிக்கடி மற்றவர் பயன்படுத்திய உடைகளை உபயோகிப்பதால் ring worm தோல் வியாதி உண்டாகிறது. கூடவே மன எரிச்சலும் உண்டாகிறது. இப்படி ஒருவர் செய்யும் பணியின் அடிப்படையில் அவரது மனோபாவமும் மாறுகிறது. அதேசமயம் ஒருவர் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளான பேருந்து ஓட்டுனர், அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கர்கள், டைப்பிஸ்டுகள், டைலர்கள், தொழில் அதிபர்கள் இது போன்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலிலும் பலவகைகள் உண்டு. அதேபோல அவர்கள் மலம் கழித்து விட்டு வரும்போது நாற்றமும் வெவ்வேறு வகைப்படுகின்றன. இதைப்பொறுத்தும் கூட அம்மருத்துவத்தில் வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவர்கள் அடிக்கடி காபி, டீ அருந்துவதை விடவேண்டும். காலை வேளைகளில் ஆகாரம் உண்ணாமல் இருக்கக் கூடாது. 'பைல்ஸ் எனப்படும் மூலம் தனி மூலம், பல மூலம், வெளி மூலம் என்று பல வகைகள் உள்ளன.
இதைத்தவிர முதுகெலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் வர வாய்ப்புண்டு. இவர்கள் முதுகுப்புறம் இருக்கையின் சாய்வுப் பகுதியில் இருக்குமாறு அமர வேண்டும். மலச்சிக்கலுக்கு கோக்கா, நக்ஸ்வாம், அலுமினா போன்ற மருந்துகள் இம்மருத்துவத்தில் உள்ளன. இருப்பினும் மருத்துவரை அணுகியபின் உட்கொள்வது நலம், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை நிருபர், செய்தித் தொகுப்பாளர் போன்றோர் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறப்பார்கள். இவர்களும் காலை வேளைகளில் சாப்பிடுவதே கிடையாது. தவிர வெகு நேரம் சிறுநீர் கழிக்க இயலாத சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படும். சில நேரங்களில் ஓய்வின்றி ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்படும் பலவித அசௌகரியங்கள், இவை தவிர்க்க இயலாதவை. காலை வேளைகளில் ஆகாரத்தைத் தவிர்க்கவே கூடாது. சிலநேரங்களில் உணவு சரியாகக் கிடைக்கவில்லையெனில் நல்ல நீரையாவது பருக வேண்டும். பார்ட்டிகளில் சினேகிதர்களுக்கு 'கம்பெனி' கொடுப்பதற்காக மது அருந்த ஆரம்பித்து முடிவில் அதுவே தினசரி பழக்கமாகிவிடும். இப்பழக்கம் முடிவில் ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் கொண்டு விட்டு விடும். சரியான இடைவெளிகளில் சாப்பிடாமல் இருந்தால் அது வயிற்றுப் புண் அதாவது அல்சரில் முடிந்து விடும். காவலர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் தோன்ற அதிகம் வாய்ப்புள்ளது. வாயுத் தொல்லைக்கு கார்போவெஜ், நக்ஸ்வாம், அச்போடிடா முதலிய மருந்துகளும், மலச்சிக்கலுக்கு நேட்மூர், அலுமினா, கிராபைட் முதலான மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பேச்சாளர்கள், கோவில்களில் பணிபுரியும் மத குருமார்கள் போன்றவர்கள் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால் கால் முட்டி இணைப்புகளில் வலியும், கால் சதைகளில் வலியும் வர வாய்ப்புள்ளது. தவிர மேடைப்பேச்சாளர்கள் டென்ஷன் என்பதைச் சந்திக்க வேண்டியிருப்பதனால் அவர்களுக்கு ரத்தக் கொதிப்பும் வருகின்றது. தமது டென்ஷனைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு மது அருந்தவும் தொடங்கி விடுகின்றனர். தவிர உரத்த குரலில் பேசுவதாலும், இடைவிடாது பேசிக்கொண்டே இருப்பதனாலும் அவர்களுக்கு தொண்டைவலி வரவும், மேல் சுவாசக் குழல் வேக்காடும் வருகின்றது. இவர்கள் எந்தக் காரணங்களினால் இதுபோன்ற நோய்கள் வருகின்றன என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்தல் நலம். ஒவ்வொரு பணி செய்யும்போதும் இதுபோன்ற ஏதாவது நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அதற்காக எந்தவித வேலையும் செய்யாமலிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். அதைவிட எந்தக் காரணங்களினால் நோய்கள் வருகின்றன என்று பார்த்து அவற்றைச் செய்யாமல் தவிர்த்தால் நலமாக வாழலாம்.
பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்யமாக வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நெறிமுறைகள் யாவை?
காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில் சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில் நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள், மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும். மனைவி இருக்கும்போது வேறு உறவை நாடாதீர்கள். எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க இது ஒன்றே சிறந்த வழி. கண்களை அதிகம் உபயோகிக்க வேண்டிய வேலையிலிருப்போர் அடிக்கடி வெளியே வந்து இயற்கை வெளிச்சத்தைப் பார்ப்பது நல்லது. அதிகக் கோபம், உணர்ச்சிவசப்படுதல் இவற்றைத் தவிர்த்து, யோகா, தியானம் இவற்றைத் தினமும் செய்வது நல்லது. குளிர் சாதனப்பெட்டியில் வைத்த பொருட்களை அடிக்கடி எடுத்து சூடு செய்து உண்பது நல்லதல்ல. ஒருமுறை எடுத்தால் அதை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதையும் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக செய்வது நல்லதல்ல. உணவைப் பொறுத்தவரை தற்போது பெருகி வரும் சாலையோரக் கடைகளில் தட்டுகளை ஒரே பக்கெட்டில் நீர் வைத்து அதிலேயே கழுவுகிறார்கள். அதுபோன்ற இடங்களில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் ஹோமியோபதியில் மட்டுமல்ல. நமது முன்னோர்கள் சொல்லி வைத்த முறைகள்தாம்.
மற்ற மருத்துவமுறைகளின்றும் ஹோமியோபதி மருந்துகள் எவ்விதத்தில் வேறுபடுகின்றன?
சாதாரணக் காய்ச்சலை எடுத்துக் கொள்வோம். 104 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் கூட அலோபதி மருந்துகளை உட்கொண்டால் உடல்நிலை சரியாகி விடும். உடல் மிகவும் அயர்ச்சியாகி சரியாவதற்கு சில வாரங்களாகும். ஆனால் குழந்தைகள் காய்ச்சலினால் அவதியுறும்போது ஹோமியோபதி மருந்து உட்கொண்டால் உடனே காய்ச்சல் இறங்காமல் படிப்படியாகத்தான் இறங்கும். ஆனால் உடல்நிலை கொஞ்சமும் சோர்வாகாது. நன்றாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதை அனுபவித்தால்தான் புரியும். மேலும் இங்கிலாந்தில் ஹோமியோபதியின் சிறப்பை நன்கு உணர்ந்து இப்படிப்பை படிக்க வேண்டுமெனில் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. படிப்பு படித்த பின்புதான் படிக்க முடியும் என்று வைத்துள்ளார்கள். சென்ற ஆண்டு இங்கிலாந்து மகாராணி இந்தியா வந்திருந்தபோதும் கூடவே அவரது தனி ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் க்வின் என்பவர் உடன் வந்திருந்தார். வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை வரை போவதை முற்றிலும் தவிர்க்கலாம். இதனை மக்கள் முன்பை விட அதிகமாகப் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். முற்றிலுமாக புரிந்துகொள்வதற்கு அதிக காலம் ஆகாது.