Monday, February 26, 2007

ஆஸ்துமா..

ஆஸ்துமா என்றால் என்ன?
இது ஒரு பரவலான நோய்.
மூச்சுக்குழாய், அதன் கிளைகள் எதிர்பாராத தருணங்களில்
சாதாரண நிலை (விட்டம்) யில் இருந்து, திடீரென
சுருங்கி விடும் நிலை. மீண்டும் மீண்டும் நாம் அழைக்காமலேயே
வலிய நம் நுரையீரல் வீட்டுக்கு வந்து வந்து போகும் வேண்டாத விருந்தாளி.
அவர் இல்லாத நேரம் வீடு நல்லாகவே இருக்கும்!!

இந்த மாற்றம் சில மணி நேரங்களில்...ஏன் சிலருக்கு
சில நிமிடங்களிலேயே கூட நிகழ்ந்துவிடும்.
மூச்சுக்குழாயின் (Air-ways, Trachea and its branches..--> Bronchi)
அகவணிச் சவ்வு ( Bronchial Mucosa) அழற்சியால்
சிவந்து, வீங்கி, நீர்ச் சளி தேங்கி இந்த விட்டக்குறுகல் நேர்கிறது.

ஏன் வருகிறது ?

இந்த அழற்சிக்கு முக்கியமான தூண்டுதல்கள்:
வீட்டு தூசி
போர்வை, தலையணை " அழுக்கு"
இலை, பூ மகரந்தங்கள்
செல்லப்பிராணிகளின் கேசம், காய்ந்த எச்சில்
புகை (அடுப்பு சமையல் அறையிலோ, அப்பாவின் வாயிலோ இருக்கலாம்)
உடற்பயிற்சி
குளிர்க்காற்று
பி.எஸ். வீரப்பா, மதன்பாப் பாணி சிரிப்பு
மனநிலை சோர்வு, தளர்வு ( பிளஸ் 2 தேர்வுகள்...!!!)
இவற்றின் ஒட்டுமொத்த பெயர் : ஒவ்வாதவை (Allergens)


யாருக்கு வரும் ?

எந்த வயதிலும் வரலாம்.
சிறுவயதில் வந்தால், டீன் ஏஜில் குறைந்து மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
உறவினருக்கு இருந்தால், நமக்கு வரும் சாத்தியம் சற்று அதிகம்.

நோய்க்குறிகள் என்ன ?

வறட்டு இருமல்
நார் போல் துப்ப சிரமம் தரும் சிறு சளி
விசில் போல் மூச்சுடன் சப்தம் (Wheezing)
சாதாரணப் பணிகளுக்கே மூச்சு வாங்குதல்
சும்மா இருக்கும்போதே மூச்சு (வெளியே) விட சிரமம்


ஆஸ்துமா: நிவாரணம் என்ன ?

பொது அறிவுரை:
1) நல்ல குடும்ப மருத்துவரின் ஆலோசனை
2) அவர் பரிந்துரையில், தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரின் அவதானிப்பு
3) புகையில்லா சூழல்
வாகனப் புகையை குறைக்கத்தான் முடியவில்லை.
வாய் விடும் புகை, ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள்.
பொதுவாக, Passive Smoking -ன் கேடுகள், குறிப்பாக குழந்தைகள்
பாதிக்கப்படுவது இன்னும் பரவலாக பலரால் அறியப்படவில்லை.
ஒரு அறை / காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்து
புகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.
4) ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி
5) மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப்
பயன்படுத்துங்கள் - உடல் நலமாய் இருந்தாலும்.


மருந்துகள்:

Inhalers __> இன்ஹேலர்ஸ் (மூச்சில் உறிஞ்சுபவை)

1) தீர்ப்பவை = Relievers
வந்துவிட்ட மூச்சுத்திணறலை உடனடியாக கட்டுப்படுத்த/ போக்க.
சுருங்கிய காற்றுக் குழாய்களின் தசைகளை தளர்த்தி
விட்டத்தை அதிகரிக்கிறது.
எப்போதும் (காலாவதியாகாத) மருந்து கைவசம் இருக்கட்டும்.
(எதிர்பாராத விருந்தாளி ஆயிற்றே நம் ஆஸ்துமா...!)
கண்டிப்பாய் வரும் என (பழக்கத்தால்) நீங்கள் கண்டுகொண்ட சூழல்களில்
(விளையாட்டு, குளிர்க்காற்று), அவற்றை எதிர்கொள்ளும் சற்று முன்பே
(முன் ஜாமீன்) இவற்றைப் பயன்படுத்தலாம்.
அடிக்கடி, தினமும் இவை தேவைப்பட்டால், வருமுன் காக்கும் அடுத்த கட்ட
மருந்துகள் தேவை என்று அர்த்தம்.

2) காப்பவை = Preventers
காற்றுக்குழாய் அகவணி அழற்சியைக் கட்டுப்படுத்தி, வீக்கம், சளிநீர் கோர்ப்பதை
மட்டுப்படுத்தும்.
தொடர்ந்து , உடல் நலமாக இருப்பினும் பயன்படுத்த வேண்டும்.
மருந்தளவு கூட்ட, குறைக்க மருத்துவர் ஆலோசனை தேவை.

இதற்கு அடுத்த கட்ட சிகிச்சைகள்:
நெபுலைசர் ( சிறுதுகள்களான "தீர்ப்பவை" ரக மருந்துகளை
வேகமாக ஒரு கருவி மூலம் மூச்சுக்குழாய்க்குள் செலுத்துவது)
ஆக்ஸிஜன்
ஸ்டீராய்டு மாத்திரைகள்
போன்றவை உங்களைப் பரிசோதித்த மருத்துவரின் நேரடி
கண்காணிப்பில் நடக்க வேண்டிய சமாச்சாரங்கள்.

No comments: