Monday, February 26, 2007

ஆயுர்வேத வைத்தியம்

தமிழகம் பண்டுதொட்டு மருத்துவக்கலையில் மேம்பாடு கொண்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுச்சான்றுகள் ஆதாரமாகக் கிடைக்கின்றன. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டொன்றில் மருத்துவமனை செயல்பட்டது குறித்தும், மருத்துவக் கலாசாலை இருந்தது பற்றியும், அங்கிருந்த மருந்துகள் பற்றியும் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் கிடைக்கப்பெறும் மருத்துவச் செய்திகளின் விளக்கமே

திருமுக்கூடல் கல்வெட்டு :

காஞ்சிபுரத்தின் அருகில் திருமுக்கூடல் என்ற ஊரிலுள்ள பெருமாள் கோவிலில் வீரராசேந்திரன் (கி.பி. 1067) காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு அக்கோவிலின் செலவுகளைக் கூறுகிறது. இச்செலவுச் செய்திகளில் அக்கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட வேதாகமக் கல்லூரி, ஆதுலர் சாலை (மருத்துவமனை), இவ்விரண்டையும் சார்ந்த விடுதி ஆகிய மூன்றின் குறிப்புகள் வருகின்றன. கல்வெட்டில் மருத்துவமனை 'ஆதுலர்சாலை' எனக் குறிப்பிடப்படுகிறது. இம்மருத்துவமனை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததுடன், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி புகட்டியும், மருந்துகளைத் தயாரித்தும், பாதுகாத்தும் இருந்துள்ளது. மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் பற்றியும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றியும் மருத்துவமனையில் இருந்த மருந்துகள் பற்றியும் குறிப்புக்கள் அக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

மருத்துவமனையில் பணியாற்றியவர்களும் - செலவுகளும்

இம்மருத்துவமனை 15 படுக்கைகளைக் கொண்டிருந்தது. மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பை ஆதுலர் நடத்தி வந்தார். இவருக்கு நிலம் அளித்து, அந்நிலத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 90 கலம் நெல்லும் 8 காசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு அறுவை சிகிச்சையாளர் இருந்தார். இவருக்கு 30 கலம் நெல் வழங்கப்பட்டது. மருத்துவ உதவிக்காக இரண்டு உதவியாளர்கள் (வீரன்) நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 60 கல நெல்லும் 2 காசும் வழங்கப்பட்டன. இவர்கள் மருந்துகளையும் தயாரிப்பார்கள். இரு செவிலியர் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு 30 கல நெல்லும் ஒரு காசும் வழங்கப்பட்டன. மருத்துவமனைக்கு ஒரு நாவிதர் நியமிக்கப்பட்டார். இந்நாவிதர் சிறுகட்டிகளை அறுவை செய்வது போன்ற செயல்களைச் செய்தார். இவருக்கு 15 கல நெல்லை அளித்துத் தன் சொந்த தொழிலையும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு நாழி அரிசி வழங்கப்பட்டது. மருத்துவமன€யில் தண்­ர் எடுப்பவனுக்கு 15 கல நெல் தரப்பட்டது. மருத்துவமனையில் இருந்த மருந்துகளைப் பாதுகாக்கும் செலவிற்காக 40 காசுகள் ஒதுக்கப்பட்டன.

மருத்துவமனையில் இருந்த மருந்துகள் :

மருத்துவமனையில் கெடாமல் பாதுகாப்புடன் வைத்திருந்த இருபது மருந்துகளின் பெயர்கள் மட்டும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :

1. பிராஹமியம் கடும்பூரி, 2. வாஸா ஹரிதகி, 3. கோ மூத்ரஹரிதகி, 4. தஸமூலா ஹரிதகி, 5. பலலாதக ஹரிதகி 6. கண்டிர(ம்) 7. கலாகேரண்டம(ம்) 8. பஞ்சாகத்தைலம் 9. லஸ•நாட்யேரண்ட தைலம் 10. உத்தம கரணாபித்தைலம் 11. ஸ”க்ல ஸகிரித 12. பில்வாதி கிரிதம் 13. மண்டுகர வடிக(ம்) 14. த்ரவத்தி 15. விமல(ம்) 16. ஸ”நேத்ரி 17. தாம்ராதி 18. வஜ்ரகல்ப 19. கல்யாணகலவண(ம்) 20. புராண கிரித(ம்).

பிராஹமியம் கடும்பூரி

1000 கடுக்காய்கள், 3000 நெல்லிக்காய்களுடன் வில்வவேர், பாதிரிவேர், குஞ்சுவேர், சலமவேர், கூலவேர் ஆகிய ஐந்து வேர்களையும் 200 பலம் எடுத்து 2500 பலம் தண்­ர் விட்டு இக்கலவை பத்தில் ஒரு பங்கு ஆகுமளவிற்குக் காய்ச்ச வேண்டும். இக்காய்ச்சலைத் திரவ நிலைக்குக் கொண்டு வந்து விதை நீக்கிய கடுக்காய்களைக் கொஞ்சம் சேர்த்து அக்கலவையுடன் மண்டுக பரணி 4 பலம், பல்லாரை 4 பலம், பப்பாளி 4 பலம் சங்குப்பூ 4 பலம் ஆகியவற்றைக் கலக்கவேண்டும். மேலும் இக்கலவையுடன் 1000 பலம் சர்க்கரையும், 2 அடகம் நல்லெண்ணையும், 3 அடகம் நெய்யும், இளநீரும் சேர்த்து வேக வைக்கவேண்டும். பிறகு 320 பலம் தேன் சேர்த்துச் சுண்ட வைக்க வேண்டும். இம்மருந்தே 'பிராஹமியம் கடும்பூரி' ஆகும். இம்மருந்து புத்தியைக் கூர்மையாக்கவும், நீண்ட ஆயுள் பெறவும், சரீரம் வலுப்பெறவும், காமாலையைப் போக்கவும் பயன்படுத்தப்பட்டது.

வாஸா ஹரிதகி :

வாஸா என்பது ஆடாதொடாப்பாலை, ஹரிகிதகி என்பது கடுக்காய் இரண்டையும் சேர்த்து லேகியமாக்கிக் கொள்வதே 'வாஸா ஹரிதகி' யாகும். இம்மருந்தைச் சுவாசகாசம் எனப்படும் நுரையீரல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

கோ-மூத்ர ஹரிதகி :

கோ-மூத்ர என்பது பசுமாட்டின் கோமயம். ஹரிதகி என்பது கடுக்காய். ஒருலிட்டர் கோமயத்தில் 25 கிராம் கடுக்காயை ஊரவைத்து வெய்யிலில் வைக்கவேண்டும். கோமயம் அனைத்தும் சுண்டிய பிறகு கடுக்காயைத் தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். மாகோதரம் எனப்படும் வயிற்றுவலி, மூல வியாதி, வயிற்றில் நீர் சுரத்தல், நீர் பிரியாமல் கைகால்களில் நீர் சுரத்தல் போன்ற நோய்களுக்கு இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

தஸமூல ஹரிதகி :

தஸமூலம் என்னும் பத்து வகையான வேர்களுடன் 100 கடுக்காய்களும் வெல்லமும் தேனும் சேர்த்து 'தஸமூல ஹரிதகி' என்ற மருந்து தயாரிக்கப்படும். இம்மருந்தைச் சிறுநீரக நோய்கள், எலும்புருக்கி நோய், நுரையீரல் சார்ந்த நோய், உணவில் நாட்டமின்மை போன்றவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

பலலாதக ஹரிதகி :

பலலாதக என்பது சேராங் கொட்டையாகும். இக்கொட்டையுடன் கடுக்காயைச் சேர்த்துக் கோமயத்தில் வேகவைத்து 'பலலாதக ஹரிதகி' தயாரிக்கப்படும். இம்மருந்தை அžரணம், மூலவியாதி, வயிற்றெரிச்சல் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.

கண்டிரம் :

மலைச்சுண்டை, தென்பாறை, சிற்றராகம், மிளகு, சுக்கு கண்டங்கத்தரி, பாப்பார மூலி ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படும். சிறுநீர்க் சூழல்கள், வயிறு சார்ந்த வியாதிகளுக்கு இம்மருந்து பயன்படுகிறது.

பலாகேரண்டம் :

பலா என்னும் குருந்தோட்டி வேருடன் ஆமணக்கு வேரையும் சேர்த்து நல்லெண்ணையில் காய்ச்சிப் 'பலா கேரண்டம்' தயாரிக்கப்படும். இம்மருந்து வாத நோய்க்குப் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சாகத் தைலம் :

கடுகெண்ணெய், சாராயம், கோமயம், வினிக்கல், பார்லிச் செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு ஐந்தையும் சேர்த்துப்புடம் செய்து தைலமாகச் செய்யவேண்டும். இத்தைலம் எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தப்படும்.

லஸ”நாட்யேரண்ட தைலம் :

லஸ”நாட் என்பது வெள்ளைப்பூண்டு. வெள்ளைப் பூண்டுடன் ஆமணக்கு வேரைத் தைலமாகக் காய்ச்சி 'லஸ”நாட் தைலம்' தயாரிக்கப்படும். இடுப்பு வலிக்கும், கால் நரம்புகளுக்கும், நெஞ்சில் அடைக்கும் வாயுவுக்கும் இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

உத்தம கரணாபி தைலம், ஸ”க்ல ஸகிரித(ம்) :

இவையிரண்டும் இன்று வழக்கில் அதிகமாக இல்லை. எனவே குறிப்புகள் பெற இயலவில்லை.

பில்வாதி கிரிதம் :

பில்வாம் என்றால் வில்வம், கிரிதம் என்றால் நெய். வில்வம் சிற்றரகம், சௌய்யம், இஞ்சி, சிரிங்கபேரம் (இரட்டை இஞ்சி), நெய், ஆட்டுப்பால் ஆகியவற்றைச் சேர்த்து பில்வாதிகிரிதம்' தயாரிக்கப்படுகிறது. ருசியின்மை, வயிற்றுப் போக்கு, காலரா, பாம்புக்கடி, தேள்கடி, எலிக்கடி போன்றவற்றிற்கு இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

மண்டுகர வடிகம் :

மண்டுகரம் எனப்படும் இரும்புடன், காட்டுமிளகு, மரமஞ்சள், மாக்கீரக்கல், காட்டுத்திப்பிலி, தேவதாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, கொடுவேர், கடுக்காய், நெல்லிக்காய், தாண்டிக்காய், கோரக்கிழங்கு ஆகியவற்றைக் கோமயத்தில் கலக்கி மாத்திரையாக்கி மோருடன் உண்ண வேண்டும். இம்மருந்தை இரத்த சோகை, தோல்வியாதி, மூலம் போன்ற வியாதிகளுக்குப் பயன்படுத்தலாம்.

த்ரவத்தி என்ற மருந்து வழக்கில் அதிகமாக இல்லாததால் குறிப்பைப் பெற இயலவில்லை.

விமலம் :

சங்குப்பூ, பிரியங்கு, நேபாலி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து விமலம் என்ற மருந்து தயாரிக்கப்படும். கண்நோய்க்கு இம்மருந்து பயன்படுத்தப்படும்.

ஸ”நேத்ரி :

சிற்றராகம், நாவற்பழம், வாயுவிடங்கம் ஆகிய பழங்களுடன் தாமரை, அதிமதுரவேர், பாறையுப்பு, கற்பூரம், சங்குப்பூ, வசம்பு, ஆயமரப்பட்டை போன்றவற்றைச் சேர்த்து ஸ”நேக்ரி தயாரிக்கப்படும். இம்மருந்து கண் நோய்க்குப் பயன்படுத்தப்படும்.

தாம்ராதி, வஜ்ர கல்ப இவ்விரண்டு மருந்துகள் வழக்கில் குறைவாக உள்ளன. குறிப்புகள் பெற இயலவில்லை.

கல்யாணகலவணம் :

லவணம் என்றால் உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, விளையுப்பு, துவர் சலைப்பு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், நாகதந்திவேர், சேர்குறு, கொடுவேலிக்கிழங்கு, ஆமணக்கு எண்ணெய், கோமயம் ஆகியவற்றை மண்சட்டியில் பஸ்பம் செய்தால் 'கல்யாணகலவணம்' கிடைக்கும். இவ்வுப்பைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டும். மலச்சிக்கல், வயிற்றில் நீர் சுரத்தல், கீரிப்பூச்சி, வயிற்றுப்புழு போன்றவற்றிற்கு இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

புராண கிரிதம் :

கிரிதம் என்றால் நெய். 100 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டு வரை பழைமையுடைய நெய்யைப் 'புராண கிரிதம்' என்றும் 'அமிர்தம்' என்றும் அழைப்பர். இந்நெய் புத்தி சுவாதினமின்மைக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும், பிரசவத்திற்கும் பயன்படுத்தப்படும்.

இம்மருந்துக் குறிப்புகளை நோக்கும் பொழுது ஹரிதகி எனப்படும் கடுக்காய் நல்ல மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வருகிறது. மருந்துகளைப் பொடியாகவும், லோகியமாகவும், தைலமாகவும், நெய்யாகவும், மாத்திரைகளாகவும் உப்பாகவும் தயாரித்து வைத்தியம் செய்துள்ள செய்தியை அறியமுடிகிறது. இக்கல்வெட்டில் உள்ள 20 மருந்துகளில் பல மருந்துகள் இன்றும் வழக்கில் உள்ளன. நுரையீரல், கல்லீரல், வயிறு, நரம்பு, கண், இரத்தம், மூளை போன்ற உறுப்புக்களின் நோயைப்பற்றியும், அவற்றிற்குரிய மருந்து முறைகள் பற்றியும் அறிந்திருந்தனர் எனலாம்.

தமிழகத்தில் மருந்துவம் மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது. கல்வெட்டில் கூட மருத்துவக் குறிப்புகளைப் பொறித்துள்ளமை அரும் பெரும் சிறப்புச் செய்தியாகும். சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனையும், மருத்துவக் கலாசாலையும், அதில் நிரந்தரமாகப் பணியாளர்களையும், மருத்துவ வல்லுநர்களையும், பணியாட்களையும் நியமித்துள்ளதையும்; ஆசிரியர், மாணவர், பணியாற்றுவோர் தங்க விடுதி வசதி செய்தமையும் நோக்கும் பொழுது தமிழகத்தில் மருத்துவம் பற்றிய தெளிந்த அறிவு இருந்தமை புலப்படுகிறது

3 comments:

vaasu said...

கோரக்கிழங்கு என்றால் என்ன அது எப்படி இருக்கும்?

arvind said...

super

Unknown said...

பாறையுப்பு என்றால் என்ன?